பாலக்கோடு, அக். 21 -
பாலக்கோடு நகர நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதி அனுபவித்து வருகின்றனர். சுமார் 4 கிலோமீட்டர் நீளத்தில் குண்டும் குழியுமாக மாறியுள்ள இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நடைபெறுவதால், மக்கள் கடும் பதட்டத்தில் உள்ளனர்.
நகரின் முக்கிய நெடுஞ்சாலையான இதே பாதையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள், அதில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன. சுமார் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினந்தோறும் பாலக்கோடு பேருந்து நிலையம் வழியாகச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
மேலும் சாலையின் ஒட்டுமொத்த பகுதியும் குண்டும் குழியுமாக மாறி இருப்பதால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் எழும் மண் தூசு கண்களில் பட்டு வாகனங்கள் இயக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது. இதனால் அவசர ஊர்திகள் கூட தாமதமாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சாலையை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.