Type Here to Get Search Results !

தருமபுரி அருகே நிலப்பிரச்சனையில் தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை கோரி தம்பதியினர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்.


தருமபுரி – அக்டோபர் 30:

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே டி.கணிக்காரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், நிலப்பிரச்சனை காரணமாக தங்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டி, தருமபுரி வட்டாட்சியர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களது நிலம் மற்றும் உயிரை பாதுகாக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

புகாரின் படி, டி.கணிக்காரஹள்ளியைச் சேர்ந்த பெருமாள் செட்டி என்பவருக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவரின் மூன்று மகன்கள் தற்போது சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். அந்த நிலத்தை பெருமாள் செட்டியின் உறவினர்கள் ஆறுமுகம் மற்றும் வேலு ஆகியோர் பல ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர்.


ஆறுமுகம் பங்கினை அவரின் மகள் தேவகி மற்றும் மருமகன் சரவணன் விவசாயம் செய்து வருகின்றனர். வேலு பங்கினை, அவரது மகன் மற்றும் தற்போதைய தருமபுரி வட்டாட்சியர் ரஜினி விவசாயம் செய்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 15 ஆண்டுகளாக ரஜினி, தேவகியின் பங்கில் கைபற்றும் நோக்கில் அடிக்கடி தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், தேவகி தனது தம்பி ஜெயபிரகாசுடன் சேர்ந்து நிலத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, ரஜினி மற்றும் அவருடைய உறவினர்கள் — சுமதி, வனிதா, சின்னப்பிள்ளை, சங்கீதா, கார்த்திக்குமரன், அஜித் ஆகியோர் — அங்கு வந்து வாடகை வாகனத்தை கற்களை வீசி விரட்டியதுடன், தேவகி-சரவணன் தம்பதியினரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.


இதனால் இருவரும் காயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களின் நிலத்தையும் உயிரையும் அபகரிக்கும் நோக்கில் தொடர்ந்தும் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும், “எங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் வட்டாட்சியர் ரஜினி மற்றும் அவரது குடும்பமே காரணம்” எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


மேலும், வட்டாட்சியர் என்ற பதவியை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும், அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது நிலம் மற்றும் உயிரை பாதுகாக்க வேண்டும் என சரவணன்-தேவகி தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies