ஒகேனக்கல், அக். 05 | புரட்டாசி 19:
தருமபுரி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலா தளமான ஒகேனக்கல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான மின்விநியோக தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மட்டுமன்றி, தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வருகை தரும் சுற்றுலா பயணிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஒகேனக்கலை நம்பி வாழும் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். மழைக்காலங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது வழக்கம் என்றாலும், இம்முறை இரண்டு நாட்களாக மின்சாரம் வழங்கப்படாதது மக்கள் வாழ்வை பாதித்துள்ளது.
இது குறித்து பலமுறை பென்னாகரம் மின்வாரிய அலுவலர்களுக்கு பொதுமக்கள் புகார் அளித்திருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
ஒகேனக்கல் ஒரு முக்கிய சுற்றுலா மையமாக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் நலனையும், அப்பகுதி மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மின்சார விநியோகத்தைச் சீர்செய்ய வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

