தருமபுரி, அக். 5 | புரட்டாசி 19:
தருமபுரி பேருந்து நிலையம் இன்று காலை முதல் மக்கள் நெரிசலில் பரபரப்பாக காணப்பட்டது. ஆயுத பூஜை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறை காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இன்று விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, வெளியூரில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு திரும்பிச் செல்லும் மாணவர்களும், தொழிலாளர்களும் ஏராளமாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.
சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இடம் பிடிக்கப் பொதுமக்கள் தள்ளுமுள்ளாக நடந்தனர்.
சிலர் ஜன்னல் வழியாக ஏறி இருக்கைகளை பிடிக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன், போக்குவரத்து ஊழியர்கள் பலர் ஒழுங்கை பேணுவதில் சிரமம் அடைந்தனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூட்டநெரிசலை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் விடப்பட்டுள்ளதாகவும், அனைத்து பயணிகளுக்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

