பென்னாகரம், அக். 04 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்விநியோகம் தடைப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பென்னாகரம் முதல் ஒகேனக்கல் வரை பின் பாதையில் மின் பாதை நிலத்தடியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த மின் பாதை பென்னாகரம் மீன் மார்க்கெட் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பென்னாகரம் மின்வாரிய ஊழியர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், போதிய ஊழியர்களை ஈடுபடுத்தாமல் குறைந்த பணியாளர்களோடு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பழுது நீக்க பணிகள் மெதுவாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஒகேனக்கல் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வன விலங்குகள் மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகம் நடமாடும் நிலையில், இரவில் மின்விளக்குகள் இல்லாமல் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அத்துடன், வீட்டு பயன்பாடுகளுக்கும் விவசாய பணிகளுக்கும் மின்சாரம் இன்றி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் பென்னாகரம் மின்வாரிய அதிகாரிகள் மெத்தன போக்கில் செயல்படுவதாகவும், உடனடி நடவடிக்கை எடுத்து மின்விநியோகம் சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

