பாப்பாரப்பட்டி, அக்டோபர் 14:
“ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 200 இடங்களை வெல்லும் என்கிறார்கள். ஆனால், பாப்பாரப்பட்டியைப் பாருங்கள், அதிமுக கூட்டணி 210 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என்பது உறுதி” என்று தொடங்கிய இபிஎஸ், ஆட்சியின் பல தவறுகளை சுட்டிக்காட்டினார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆறுதல் தெரிவிக்காததையும், கள்ளச்சாராய விபத்துகளில் உயிரிழந்த மக்களுக்கு நீதி கிடைக்காததையும் கடுமையாக சாடிய அவர், “முதல்வர் ஸ்டாலின் மக்களை காப்பாற்றவில்லை. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது” என்றார்.
மேலும், பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, குடிநீர்–வீட்டு–கடை வரி அதிகரிப்பு போன்றவற்றைத் தெளிவாக சுட்டிக்காட்டி, “மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி இது” என்று குற்றஞ்சாட்டினார். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் திட்டத்தை எடுத்துரைத்து, “ஸ்டாலின் தருமபுரியில் ஆன்லைன் மூலம் கடன் வழங்குவோம் என்று அறிவித்தார். ஆனால், தமிழகத்தில் உள்ள 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் எங்கும் ஆன்லைன் வசதி இல்லை. இது வெறும் ஏமாற்று வேலை” எனக் கண்டனம் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், குடிமராமத்து திட்டம், அம்மா மினி கிளினிக், 7.5% உள் இடஒதுக்கீடு, புதிய கல்லூரிகள், தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துக்கூறி, “அதிமுக ஆட்சி மக்களுக்காக; திமுக ஆட்சி குடும்பத்துக்காக” எனக் குற்றஞ்சாட்டினார். கடைசியாக, “2026 தேர்தலில் மக்கள் வெள்ளை பேப்பரை காட்டுவார்கள். ஒரு இடம் கூட திமுக கூட்டணிக்கு வராது. அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்கள் என நம்புகிறேன். மக்களைக் காப்போம் — தமிழகத்தை மீட்போம்” என அவர் உரையை நிறைவு செய்தார்.

.jpg)