நல்லம்பள்ளி, அக். 07 -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, தொடங்கி வைத்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், PUES, வெள்ளக்கல் பள்ளி வளாகத்தில் புதிய முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. இன்று நேரில் முகாமை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த சுமார் 25-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா மாறுதல், பிறப்பு சான்றிதழ்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டைகள், மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணை மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் போன்ற அரசு நலத்திட்ட சேவைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகும். தருமபுரியில் இதுவரை 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகள் சார்ந்த 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 15 அரசு துறைகள் சார்ந்த 46 சேவைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த முகாம்களில் மனுக்கள் உடனடியாக அல்லது 45 நாட்களுக்குள் தீர்வு பெறும் வகையில், தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிதாக சேவைகள் வழங்கப்படுமாறு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி. தேன்மொழி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு. பிரசன்ன மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

