தருமபுரி, அக். 07 -
அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தருமபுரி மாவட்டம் 60-வது வைரவிழாவை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுவினரின் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டை முன்னிட்டு, இந்தியா விடுதலைக்கு பிறகு முதன்முறையாக ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து, 1965 அக்டோபர் 2-ஆம் தேதி தமிழ்நாட்டில் புதிய 17-ஆவது மாவட்டமாக உதயமான தருமபுரி மாவட்டம் 60 ஆண்டுகள் நிறைவடைந்து வைர விழா கொண்டாடுகிறது. கடந்த காலத்தில், இந்த மாவட்டம் வேளாண்மை, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், கல்வி, தொழில் மற்றும் சிறு தானிய உற்பத்தி ஆகிய துறைகளில் சிறப்பான முன்னேற்றங்களை காண்பித்து வருகிறது.
முன்னோடி மகளிர் சுய உதவி குழு, இன்று “ஆல் போல்” தழைத்து வளர்ந்து, தருமபுரி மாவட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்தும் திட்டமாக செயல்பட்டு வருகிறது. இன்றைய பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரணி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கி நான்கு ரோடு வரை நடந்தது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி 60-வது வைரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் திருமதி அ. லலிதா, தருமபுரி வட்டாட்சியர் திரு. சௌகத் அலி, மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

