தருமபுரி, அக்டோபர் 29:
தருமபுரியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உண்மையான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை ஆனந்தன் தலைமையிலான குழு ஏற்பாடு செய்தது. காலித் குழுவின் பரிந்துரையின் படி ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல், மோசடியாக பிறர் நிரந்தரம் செய்யப்பட்டதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
உண்மையாக பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய கள விசாரணை நடத்தி, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வாரியத்தில் பணி வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், 31.03.1996 அன்று பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கான அனைத்து நிவாரணங்களும் காலித் கமிஷன் பரிந்துரையின் படி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மின்வாரியத்தில் குறைந்தபட்ச அனுபவமில்லாதவர்கள் மோசடியாக பணி நியமனம் பெற்று, பல உயிரிழப்புகளுக்குக் காரணமானதாக குற்றச்சாட்டு விடுக்கப்பட்டது. அவர்களை எதிர்த்து காவல் துறையின் மூலம் கொலைக் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் பெற்ற பணப்பலன்களை மீட்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பொன்னுரங்கன் சிறப்புரையாற்றினார். இதில் ராஜேந்திரன், முத்து, செல்வராஜ், வரதன், வெங்கடேசன், சம்பத், தங்கமணி, ராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

.jpg)