தருமபுரி, அக்டோபர் 04:
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாத நடு சனிக்கிழமையையொட்டி இன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தி மிகு சூழலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அக்கன அள்ளியில் உள்ள ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோன்று மணியம்பாடியில் உள்ள ஸ்ரீ வெங்கடரமண சுவாமி தங்ககவசத்தில் பக்தர்களை தரிசனம் செய்தார். பழைய தருமபுரி வரதக்குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கட்ரமண சாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து மனமகிழ்ந்தனர். திருக்கோவில் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மணியம்பாடியில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பி.சி.ஆர். மனோகரன், விழா குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)