கடத்தூர், அக். 04, 2025:
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும் 15 பழங்குடியினருக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கினர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, உயர் மருத்துவ சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் 02.08.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை மொத்தம் 30 உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாமில், 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் — பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல மருத்துவம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது மூக்கு தொண்டை, மனநல மருத்துவம், இயன் முறை மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் உணவியல் ஆலோசனை — வழங்கப்பட்டன.
பரிசோதனைக்கு வந்த அனைவருக்கும் ABHA கார்டு உருவாக்கப்பட்டு, முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் (CMCHIS) பதிவு செய்து தரப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கண்புரை நோயாளிகள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அறுவை சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இம்முகாமில், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குறைவான குழந்தைகள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் பரிசோதிக்கப்பட்டனர். நிகழ்வில் துனை இயக்குநர் சுகாதாரம் மரு. இராஜேந்திரன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. செம்மலை, துணை இயக்குநர்கள் மரு. புவனேஸ்வரி (தொழுநோய்), திரு. ராஜ்குமார் (காசநோய்), மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சரவணன் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் மாவட்ட மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் எளிதாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்,” என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

.jpg)