தருமபுரி, அக். 10:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அமைந்துள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தொடர் மழைப்பொழிவினால் நிரம்பிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அணையை திறந்து வைத்தனர். மொத்தம் 50 அடி உயரம் கொண்ட இவ்வணையில், தற்போது நீர்மட்டம் 47 அடி உயரத்தில் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,100 கன அடியாக பதிவாகி வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக 150 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையடுத்து பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு உள்ளிட்ட ஆற்றுக்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணை மூலம் சுமார் 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டதன் மூலம் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரும் என்றும், இது விவசாயத்துக்கு நன்மை செய்யும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.