கம்பைநல்லூர், அக். 01 -
கம்பைநல்லூர் அருகிலுள்ள கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக சிறப்பு புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இத்திருவிழாவில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பல்வேறு அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து வாங்கினர். திருக்குறள், பழமொழி, தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், பொது அறிவு, ஆங்கில அகராதி, நன்னெறிக் கதைகள் போன்ற பல்வேறு வகையான நூல்கள் மாணவர்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டன.
ஒவ்வொரு மாணவரும் 200 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை தொகை எடுத்துக்கொண்டு வந்து, முழுமையாக புத்தகங்களையே வாங்கியதில் ஆசிரியர்கள் பெருமிதம் அடைந்தனர். மேலும், சில மாணவர்கள் தங்கள் சகோதர, சகோதரிகளுக்கும் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதனை ஒட்டி ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு உண்டியல் மற்றும் ஒரு மரக்கன்றும் வழங்கப்பட்டது. மாணவர்கள் புத்தகங்களை வாங்கிய மகிழ்ச்சியோடு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு பழக்கத்தை வளர்க்கும் விதமாகவும் பயன் பெற்றனர்.
இந்த விழாவில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, சுமார் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கித் தந்ததில் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வை முன்னின்று நடத்தி மாணவர்களுடன் கலந்து கொண்டவர்கள்: சி. தீர்த்தகிரி (கணித பட்டதாரி, (ம) உதவி தலைமையாசிரியர்), வெ. ஆறுமுகம் (அறிவியல் பட்டதாரி ஆசிரியர்), கி. பாலாஜி (ஆங்கில பட்டதாரி ஆசிரியர்), சி. இரமேஷ் (உடற்கல்வி ஆசிரியர்), கோ. வ. லக்ஷ்மி (கணினி பட்டதாரி ஆசிரியர்), சௌ. கார்த்திகா மற்றும் க.தேவி (இ.நி. தற்காலிக மழலையர் கல்வி ஆசிரியர்கள்) ஆகியோர் ஆவர்.
பள்ளி தலைமையாசிரியர் ச. சாக்கம்மாள் அவர்கள், இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

.jpg)