தருமபுரி, அக். 10 -
தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாதந்தோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின்படி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி,
-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ₹200,
-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹300,
-
மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹400,
-
பட்டதாரிகளுக்கு ₹600 வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
-
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ₹600,
-
மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹750,
-
பட்டதாரிகளுக்கு ₹1000 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 31.12.2025 உடன் முடிவடையும் காலாண்டிற்கு, தகுதியுடைய பதிவுதாரர்கள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தகுதி பெற, பதிவுதாரர்கள்:
-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பித்து இருக்க வேண்டும்.
-
மாற்றுத்திறனாளிகள் ஒரு வருட பதிவு காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
-
பட்டியலின பிரிவினருக்கு வயது வரம்பு 45 ஆண்டும், மற்றவர்களுக்கு 40 ஆண்டும் ஆகும்.
-
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ₹72,000-ஐ மிஞ்சக் கூடாது.(மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் வருமான வரம்பு பொருந்தாது.)
மேலும், விண்ணப்பதாரர் தற்போது பள்ளி/கல்லூரியில் நேரடி வகுப்பில் சேர்ந்து இருக்கக்கூடாது (அஞ்சல் வழி கல்வி மட்டும் அனுமதி). பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இதற்குச் சார்ந்த தொழில்நுட்பப் பட்டதாரிகள், அரசு/தனியார் துறையில் ஊதியம் பெறுவோர், அல்லது ஏதேனும் பிற உதவித்தொகை பெறுவோர் தகுதியற்றவர்கள்.
மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவடையாமல் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள், 28.11.2025க்குள் அதனை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.