தருமபுரி, அக். 10 -
தருமபுரி மாவட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில், குறித்த காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் கூறினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழையால் ஏற்படும் வெள்ளப்பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் முன்கூட்டியே பேரிடர் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மழை அதிகமாக பெய்யும் தாழ்வான பகுதிகளின் பட்டியல், அவசரகால போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் விவரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் நீர் இருப்பு விவரங்கள், நிவாரண முகாம்களாக பயன்படும் சமுதாயக்கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மழைக்காலத்தில் குடிநீர் விநியோகம், உணவு பொருட்கள், போர்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள், வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும். மேலும், சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு முன்கூட்டியே சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் அதிகரிக்கும் போது பாதுகாப்பு நடவடிக்கைக்காக மணல் மூட்டைகள் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மழைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில் தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து அடித்தல், குளோரின் பவுடர் தூவுதல், நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஆட்சியர் ரெ. சதீஸ் அவர்கள் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ், செயற்பொறியாளர் திரு. பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.