தீபாவளி பண்டிகை: தரமான இனிப்பு, கார பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை.
தகடூர்குரல்அக்டோபர் 16, 2025
0
தருமபுரி, அக். 15:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கடை உரிமையாளர்கள் தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். அதேசமயம், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும், இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், இனிப்பு, கார வகைகள், கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்ணுவது வழக்கமாக உள்ளது. இதனையடுத்து, உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
🔹 முக்கிய அறிவுறுத்தல்கள்:
தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும்.
கலப்பட பொருட்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட அளவை மீறும் நிறமிகள் பயன்படுத்தக் கூடாது.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தி உணவு தயாரிக்கக் கூடாது.
தயாரிப்பு விபரச்சீட்டில் தயாரிப்பாளர் முகவரி, பொருளின் பெயர், தயாரிப்பு / பேக்கிங் தேதி, காலாவதி தேதி, சைவ / அசைவ குறியீடு ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
உணவுப் பொருட்களை சுகாதாரமான சூழலில் ஈக்கள், பூச்சிகள் இல்லாமல் விற்பனை செய்ய வேண்டும்.
🔹 பதிவு அவசியம்:
பண்டிகை காலத்தில் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்களும் மற்றும் விற்பனையாளர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன், அனைத்து உணவு தயாரிப்பாளர்களும் முறையான பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும்.
🔹 பொதுமக்கள் கவனத்திற்கு:
பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத் துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டுடன் இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
புகார் தெரிவிக்க வேண்டியவர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, ஆட்சியர் அலுவலகம், கூடுதல் கட்டிடம், முதல் தளம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளனர்.