தருமபுரி, அக். 15:
தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் அரிய பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு “டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்கி சிறப்பித்து வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்ததாவது: பட்டியல் இன மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
அல்லது, ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், சென்னை - 05 அல்லது தங்களது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவும் விண்ணப்பப் படிவம் பெறலாம். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றுபவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.