பாலக்கோடு, அக். 18, 2025 —
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் ஆரவற்ற அரசு குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும் 30 மாணவர்களுக்கு, தீபாவளி – 2025 பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவர்களுடன் உரையாடி, அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“தீபங்களின் ஒளி உங்கள் வாழ்க்கையின் இருளை நீக்கி, நல்வாழ்வு, அமைதி, செழிப்பு ஆகியவை உங்கள் வாழ்வில் நிலைக்கட்டும். இதயத்தில் கனிந்த ஒளிமயமான கனவுகள் நனவாகி, உங்கள் காலடி எங்கிருந்தாலும் ஒளி பரவ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தீபாவளியின் ஒளி உங்கள் மனதில் மகிழ்ச்சி மற்றும் சிரிப்பை கொண்டுவந்து, ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக அமையட்டும்.மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதயங்கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.”
இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. எம். செல்வம், மற்றும் பிற அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.