தருமபுரி, அக். 22-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பருவமழை மற்றும் இயற்கை இடர்பாடுகளுக்கான கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.10.2025) பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து அளிக்கப்பட்ட புகார்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பற்றியும், புகார் அளித்தவர்களிடம் தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதிக மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், இழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும் சரியான திட்டமிடலுடன் பேரிடர் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் மழை காரணமாக பாதிக்கப்படும் தாழ்வான பகுதிகளின் பட்டியல், அவசரகால போக்குவரத்து வழித்தடங்கள், போக்குவரத்து ஊர்திகள், நிவாரண முகாம்கள் (சமுதாயக்கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள்) ஆகியவற்றின் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், குடிநீர் விநியோகம், உணவுப்பொருட்கள், ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்கள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறும் அவர் தெரிவித்தார்.
சாலைகளில் மழைநீர் தேங்காதபடி முன்கூட்டியே சீர்படுத்தவும், அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தால் மணல் மூட்டைகள் தயாராக வைத்திருக்கவும் ஆலோசனை வழங்கினார். அவசரநிலையில் சுய உதவி குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பாம்பு பிடிப்பவர்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள் ஆகியோரின் தொடர்பு விவரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், குடிநீர் கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு குளோரின் கலந்த நீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். கால்நடை அல்லது மனித உயிரிழப்பு ஏற்படும் போது உடனடியாக நிவாரண உதவி வழங்க பிரேத பரிசோதனை அறிக்கைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும், வட்டாட்சியர்கள் மற்றும் பிற அலுவலர்கள் பேரிடர் கால பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன், மாவட்டத்தில் உள்ள மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களின் செயல்பாடுகளை சரிபார்க்கவும், GPS புகைப்படங்களுடன் அறிக்கைகள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் மாவட்ட கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்கள் – 1077, 04342-231077, 04342-231500, 04342-230067 – வழியாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் ரெ. சதீஸ் இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி ராமன் நகர் நீர்வரத்து கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள், மற்றும் பிடமனேரி ஏரியில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) திரு. சுப்பிரமணி, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. குமரேசன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)