கடத்தூர், அக். 24 -
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஒசஅள்ளி ஊராட்சியில், அரிசி குடோன் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.50 இலட்சம் மதிப்பீட்டில் மகாகனி, ஈட்டி, வேங்கை மற்றும் புளியமரம் உள்ளிட்ட 500 மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கடத்தூர் ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சி, உனிசின அள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.01 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டு வகுப்பறை கட்டிடம் பழுதுபார்த்தல் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.57.80 இலட்சம் மதிப்பீட்டில் தாளநத்தம் முதல் காவேரிபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள தார்சாலையையும், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி, முனியப்பன் கோவில் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.48 இலட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் பண்ணை அமைத்தல் பணிகளையும் பார்வையிட்டார்.
மொத்தம் ரூ.84.79 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக, கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சி, உனிசின அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பி, அவர்களின் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருமதி சுமதி, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. சுருளிநாதன், திரு. செல்வன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)