தருமபுரி. அக். 22 -
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இதுவரை ரூ.465.31 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 21,214 பயனாளிகள் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளனர். மேலும், 16,63,680 கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் 600 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் நடத்தப்பட்டு, 15,742 கால்நடை வளர்ப்போர் பயனடைந்துள்ளனர். தேசிய கால்நடை இயக்கம் – கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.9.94 இலட்சம் மதிப்பீட்டில் 2,946 விவசாயிகளின் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
NADCP திட்டத்தின் கீழ்
-
10,67,500 மாட்டினங்களுக்கு கோமாரிநோய் தடுப்பூசி,
-
6,50,000 மாட்டினங்களுக்கு தோல்கழலை நோய் தடுப்பூசி,
-
57,930 கன்றுகளுக்கு புருசில்லோசிஸ் தடுப்பூசி,
-
9,42,700 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி,
-
13,050 வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தீவன அபிவிருத்தித் திட்டம் மூலம் ரூ.294.2 இலட்சம் மதிப்பீட்டில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை மற்றும் பழத்தோட்டங்களுக்கு இடையில் பசுந்தீவனம் வளர்க்கும் திட்டம் நிறைவு பெற்று, 232 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
NABARD RIDF XXIX திட்டத்தின் கீழ், ரூ.59 இலட்சம் மதிப்பீட்டில் பென்னாகரம் கால்நடை மருந்தகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அது 04.07.2025 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
2025–26 ஆண்டிற்கான புதிய திட்டங்கள்:
-
50% மானியத்தில் சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்கும் திட்டத்தில் 10 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.15.14 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
-
மேலும், ரூ.25.94 இலட்சம் மதிப்பீட்டில் 200 பயனாளிகளுக்கு புல்நறுக்கும் கருவிகள் 50% மானியத்தில் வழங்கப்படவுள்ளன.
இவ்வாறு பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை பல ஆயிரம் விவசாயிகள் மற்றும் வளர்ப்போருக்கு நன்மை செய்துள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

.jpg)