தருமபுரி. அக். 22 -
அயல்நாடுகளில் பணிபுரியும் அல்லது கல்வி பயிலும் தமிழர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் சென்னை அயலகத் தமிழர் நல வாரியம் உறுப்பினர் செயலர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் 18 முதல் 55 வயதுடைய தமிழர்கள், “அயலகத் தமிழர் நல வாரியம்” உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த பின் வழங்கப்படும் அடையாள அட்டையின் மூலம் அயலகத் தமிழர்கள் காப்பீடு திட்டம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்திட்டம் போன்ற பல நலத்திட்டங்களில் பயன் பெறலாம்.
மேலும், தமிழக அரசின் அயலகத் தமிழர் நல வாரிய இணையதளம் https://nrtamils.tn.gov.in மூலம் 15.05.2024 முதல் இணைய வழிப் பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டையைப் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் தற்போதைய நலத்திட்டங்களோடு, எதிர்காலத்தில் அரசால் அறிமுகப்படுத்தப்படும் புதிய நலத்திட்டங்களிலும் அயலகத் தமிழர்கள் பயன்பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.

.jpg)