பாலக்கோடு, அக். 05:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி சின்னார் அணை, சமீபத்திய தொடர்ச்சியான கனமழையால் வேகமாக நிரம்பி வருகிறது. தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட காப்புகாடு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, 50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 39.3 அடி வரை நீர் உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் மேலும் உயர்ந்தால், உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பொதுப்பணித்துறை பராமரிக்கும் ஏரி கால்வாய்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நீண்டநாளாக தூர்வாரப்படாததால், புதர்கள் மண்டி நீர் ஓட்டத்தை தடை செய்கின்றன. இதன் விளைவாக உபரி நீர் கடலில் கலந்துவிடும் நிலையில், பல ஏக்கர் நிலங்கள் பாசன நீரின்றி தரிசாகி வருகின்றன.
இதையடுத்து, “அரசு உடனடியாக கால்வாய்கள், ஏரிகள், குளங்களை தூர்வாரி பருவமழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

