அரூர், அக். 05:
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.10.2025) அரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள், உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில், புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் மையம், மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், நோயாளிகள் விவரம் கணினியில் பதிவு செய்யும் முறை குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், தீவிர சிகிச்சை பிரிவு, அவசர பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுகள் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் அமர்வதற்கான இடங்கள், மருத்துவமனை வளாகத்தின் சுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி,
“நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக சுத்தம், குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மருத்துவமனை சமையல் பிரிவில் நேரில் ஆய்வு செய்தார். நாய் கடி மற்றும் பாம்பு கடிக்கான மருந்துகள் போதுமான அளவில் இருப்பது குறித்தும் உறுதி செய்தார்.
இந்த ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விளக்கமளித்தனர்.

