அரூர், அக். 05 | புரட்டாசி 19:
இந்திய குடியரசு கட்சியின் தருமபுரி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மாநில இளைஞரணி தலைவர் பழனிசாமி தலைமையில் அரூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயல்தலைவர் எம். ராஜேந்திரன் மற்றும் மாநில செயலாளர் ஆர். ஜான்சன் பாபு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கட்சி வளர்ச்சிக்கான பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன், மறைந்த மாநில தலைவர் பி.வி. கரியமால் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசு மக்களின் பாதுகாப்பிற்காக போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கரூரில் நடந்த பெருந்துயரம் போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், அரூர் பேருந்து நிலையத்துக்கு மறைந்த மாநில தலைவர் பி.வி. கரியமாலின் பெயர் சூட்ட வேண்டும், அரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தங்கும் விடுதி அமைக்க வேண்டும், மேலும் அரூர்–தருமபுரி வழித்தடத்தில் இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தன், பிலவங்கன், த.கா.முருகன், அகிலன், குருபாரன், வடகரை மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர செயலாளர் ஆட்டோ குமார் நன்றி கூறினார்.

