அரூர். அக். 12 -
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே குமாரம்பட்டி காந்திநகரில் அமைந்துள்ள முல்லை மெட்ரிக் பள்ளி மற்றும் முல்லை நர்சிங் கல்லூரியில் 10ஆம் ஆண்டு விழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முல்லை அறக்கட்டளை தலைவர் ராஜி தலைமையேற்றார். வரவேற்புரையை முல்லை அறக்கட்டளை செயலாளர் வினோநாத் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை தலைவர் சரவணன், பொருளாளர் கல்யாண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டு அறிக்கையை முல்லை மெட்ரிக் பள்ளி முதல்வர் உத்தேஷ் மற்றும் முல்லை நர்சிங் கல்லூரி முதல்வர் ஹேமலதா வாசித்தனர்.
சிறப்பு அழைப்பாளராகப் பட்டிமன்ற நடுவர் மற்றும் பேச்சாளர் ஞானசம்பந்தம் “வானமே எல்லை” என்ற தலைப்பில் உரையாற்றி மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். விழாவில் பாடல், திரைஇசை நடனம், ஓவியம், பரதநாட்டியம், கோலாட்டம், வினாடி வினா போன்ற பல்வேறு கலை மற்றும் போட்டிகள் நடைபெற்றன. முல்லை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.