அரூர், அக். 09 -
தருமபுரி மாவட்டம், அரூரில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு சேலம் ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் எலைட் மற்றும் அரூர் ரோட்டரி கிளப் இணைந்து 9 நாள் தொடர் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம் இன்று (08.10.2025) தொடங்கியது. இம்முகாம் இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை அரூர் அருகேயுள்ள நம்பிப்பட்டியில் உள்ள அன்னை காலேஜ் ஆஃப் நர்சிங் வளாகத்தில் நடைபெறும்.
தினசரி காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் இம்முகாமினை ரோட்டரி மாவட்ட ஆளுனர் சிவசுந்தரம் மற்றும் ரோட்டரி மாவட்ட கவுன்சிலர் தர்மேஸ் ஆர். பட்டேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்தனர். தேவையுடையவர்களுக்கு இலவசமாக அங்கேயே கண் புரை அறுவை சிகிச்சை செய்யும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே 300-க்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
இம்முகாமின் மூலம் அரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள மலைப்பகுதி கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி கண் பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அன்னை கல்வி குழுமத் தலைவர் ஹரிஹரன் சர்ச்சில், துணை ஆளுனர்கள் விஜயகுமார், பிரதீப்குமார், ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் எலைட் தலைவர் மகேஸ்குமார், செயலாளர் அருண்பிரசாத், பொருளாளர் யுவராஜ், ரோட்டரி கிளப் ஆஃப் அரூர் தலைவர் நாராயணன், செயலாளர் தமிழரசன், பொருளாளர் எம். கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.