அரூர், அக். 08 -
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சேலம் டாஸ்மாக் களஞ்சியத்துக்குச் செல்லும் பீர் மற்றும் மதுபாட்டில்களால் நிரம்பிய லாரி ஒன்று, அரூர் அருகே கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின்படி, அந்த லாரியில் ₹7 லட்சம் மதிப்புள்ள பீர் மற்றும் மதுபாட்டில்கள் ஏற்றப்பட்டிருந்தன. லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியைச் சேர்ந்த பழனிசாமி (வயது 32) என்பவர் ஓட்டிச் சென்றார்.
அரூர்–ஊத்தங்கரை நான்குவழிச் சாலையில் மோப்பிரிப்பட்டி அருகே வந்தபோது, பழனிசாமி கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையின் சென்டர்மீடியனை மோதியதில் கவிழ்ந்தது. இதில், லாரியின் அடியில் சிக்கிய ஓட்டுநர் பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த அரூர் டிஎஸ்பி கரிகால்பாரிசங்கர், மற்றும் அரூர் தீயணைப்பு மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள், பெரிய முயற்சியுடன் உடலை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் மக்கள் திரள் ஏற்பட்டது. லாரியில் இருந்த மதுபாட்டில்கள் உடைந்து சாலையில் ஆறு போல் ஓடியது, பலர் மது பாட்டில்களை அள்ளி சென்றனர், இதனால் சுற்றியுள்ளோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.