தருமபுரி மாவட்டம் மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை, தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய 7-ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா – 2025, இன்று (05.10.2025) சிறப்பாக நிறைவடைந்தது.
நிறைவு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, புத்தகத் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரையாற்றியபோது, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். அதன்படி தருமபுரியில் நடைபெற்ற இத்திருவிழா மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு ரூ.48 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன என்பது மகிழ்ச்சி தருகிறது” என தெரிவித்தார்.
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை நடைபெற்ற இத்திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இலக்கியம், வரலாறு, அரசியல், மானுடவியல், நலவாழ்வு, சுற்றுச்சூழல், சிறுவர் இலக்கியம் மற்றும் போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புத்தகங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
மேலும், முன்னணி எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்ற சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்வுகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் இருந்து வந்த நூலாசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, மாவட்ட நூலக அலுவலர் திருமதி கோகிலவாணி, தகடூர் புத்தகப் பேரவை தலைவர் திரு. இரா. சிசுபாலன், ஒருங்கிணைப்பாளர் திரு. இ. தங்கமணி, பொருளாளர் திரு. மு. கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

