அரூர், அக்டோபர் 22:
தற்சமயம் அரூர் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், விவசாயிகள் வேளாண்மை துறையினரின் ஆலோசனையின் பேரில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பா பருவத்தில் சில இடங்களில் நெல் வயல்களில் தண்டு துளைப்பான் மற்றும் புகையான் தாக்குதல் காணப்படுவதால், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி ஆர். ரத்னாகர் அவர்கள் பல்வேறு கட்டுப்பாட்டு வழிமுறைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
நெல் பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல் ஏற்பட்டால் மணிகள் பால் பிடிக்காமல் வெண்கதிர்களாக காணப்படும். இதனைத் தவிர்க்க நெல் நாற்றுகளை நெருக்கமாக நடாமல், முதிர்ந்த நாற்றுகளின் நுனி பகுதியை கிள்ளி நடவு செய்யவும், மாலை நேரங்களில் விளக்குப் பொறியால் தாய் அந்து பூச்சிகளை அழிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. கடுமையான தாக்குதல்களில் புளுபென்டமைடு 20% WG – 50 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP – 400 கிராம் தெளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல், புகையான் தாக்குதலால் நெல் இலைகள் தீக்காய்ந்தது போல் காய்ந்துபோகும் நிலையில், பைமெட்ரோசின் 50% WG – 120 கிராம் அல்லது குலோதையணின் 50% WG அல்லது பிப்ரோனில் 5% SC – 400 மில்லி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என கூறப்பட்டது. மேலும் ஆனை கொம்பன் ஈ தாக்குதல் ஏற்பட்டால் தாயோமீதோக்சாம் 80 கிராம் அல்லது பிப்ரோனில் 5% SC – 400 மில்லி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் எனவும் கூறப்பட்டது.
விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், பசுந்தாள் உரங்களை பயன்படுத்தவும், யூரியா மற்றும் டி.ஏ.பி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது. மேலும் பருவமழை காரணமாக நிலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதியை அமைத்துக்கொள்ளுமாறு அரூர் வேளாண்மை உதவி இயக்குநர் திரு. ஆர். இளங்கோவன் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த வயல் ஆய்வு நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி ரத்னாகர், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) திருமதி சிவசங்கரி, வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் அரூர் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)