தருமபுரி, செப். 03 (ஆவணி 18) :
பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு உடனடியாக தீர்வு காண தமிழக அரசு “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் முகாம்கள் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மற்றும் இன்று முகாம்கள் நடைபெற்றன.
முகாம்களில் நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பட்டா மாற்றம், இலவச மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை, மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ பரிசோதனைகள் போன்ற சேவைகள் இதில் அடங்கும்.
பாலவாடி ஊராட்சியில் இன்று நடைபெற்ற முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி தலைமையேற்றார். மகளிர் உரிமைத் தொகைக்காக ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர். மேலும் பட்டா மாற்றம், இலவச மனை பட்டா, முதியோர் உதவி, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை துறை சார்ந்த அலுவலர்கள் பெற்றனர்.
மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில் பொதுமக்கள் சர்க்கரை நோய், பி.பி., இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வைகுந்தம், பேரூராட்சி தலைவர், உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.