தருமபுரி, செப். 03 (ஆவணி 18) :
சாலை விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கும் நோக்கில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் 7,838 நபர்கள் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்ட தகவலில், இந்தத் திட்டம் 18 டிசம்பர் 2021 அன்று முதல்வர் தொடங்கி வைத்ததாக கூறப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் தற்போது 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை மட்டுமல்லாமல், நோயாளியின் நிலைமைக்கேற்ப தொடர்ந்து சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது:
-
நோயாளி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளி என்றால் அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறலாம்.
-
பயனாளியாக இல்லாவிட்டால், நோயாளியை அரசு மருத்துவமனைக்கு மாற்றி இலவசமாக சிகிச்சை வழங்கப்படும்.
இந்த திட்டம் அறிமுகமானதிலிருந்து, 7,838 விபத்து பாதிப்புக்குள்ளானவர்கள் தருமபுரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளனர்.