தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் முன்வைத்த 7 அம்சக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் அலுவலர்கள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி தருமபுரி புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைவேல் தலைமை வகித்தார்; மாவட்ட செயலாளர் சிவன் முன்னிலை வகித்தார். ராஜா மற்றும் தனபால் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இறுதியாக மாவட்ட பொருளாளர் பகவதி நன்றி கூறினார்.
முக்கிய கோரிக்கைகள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் வாரத்திற்கு 2 முகாம்கள் மட்டுமே நடத்தும் வகையில் சீரமைப்பு மற்றும் தேவையான தன்னார்வலர்கள், நிதி, அடிப்படை வசதிகளை ஒதுக்கீடு செய்தல்.
பேரிடர் மேலாண்மைக்கென சிறப்பு பணியிடங்கள் உருவாக்கம் மற்றும் 31.03.2023 அன்று கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்குதல்.
புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உருவாக்கி சான்றிதழ் வழங்கல், அரசு திட்ட பணிகளை விரைவுபடுத்தல்.
அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கல்.
கருணை அடிப்படை நியமன உச்சவரம்பை 5% இலிருந்து மீண்டும் 25% ஆக உயர்த்தல்.
இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பதவி நிர்ணய குழப்பங்களை சரிசெய்ய உடனடி அரசாணை வெளியிடல்.
இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அலுவலர்கள் இன்றி செயலிழந்தன. மாவட்ட அளவில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் அலுவலக பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.