தருமபுரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரும் 7-ம் தேதி நெல்லையில் வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் கண்டன மாநாடு நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஆயத்தக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றிகரமாக இருந்து வருகிறது. இது கொள்கை அடிப்படையிலான கூட்டணி. எதிர்காலத்தில் ராகுல் காந்தி பிரதமராக வருவதை உறுதிப்படுத்தும் கூட்டணி எனவும் தெரிவித்தார்.
மோடி தலைமையிலான ஆட்சியை “மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சி” என்று குறிப்பிட்ட அவர், வாக்கு திருட்டின் மூலம் பாஜகவினர் ஆட்சி அமைப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றார். இதை மக்களிடம் எடுத்துக்கூறுவதால் ராகுல் காந்திக்கு எதிராக வன்மம் காட்டப்படுகிறது. ஆனால் அவர் காந்திய வழியில் தைரியமாக எதிர்கொள்வார் எனவும் தெரிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடங்கிய பிறகு தமிழ்நாடு 9.6% வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், பல துறைகளில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். சமீபத்தில் முதலமைச்சர் ஜெர்மனியில் மேற்கொண்ட பயணத்தின் மூலம் மட்டும் 3,500 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளதாகவும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் பவன் கேரே உரிய நேரத்தில் விளக்கம் தருவார். காங்கிரஸ் கட்சி அன்பு மூலமே மக்களிடம் செல்லும், வன்மம் காட்டாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
- தருமபுரி செய்தியாளர் முருகேசன்.

