அரூர், செப். 06 (ஆவணி 21):
தமிழக அரசு செப்டம்பர் 6-ஆம் தேதியை காவலர் தினமாக அறிவித்துள்ள நிலையில், அரூரில் காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.
அரூர் கோட்டத்திற்குட்பட்ட 9 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பங்கேற்ற இப்போட்டிகள் அரூர் மினி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. கைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், இறகு பந்து, செஸ், கேரம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அரூர் உட்கோட்ட டிஎஸ்பி கரிகால்பாரிசங்கர் தலைமையேற்றார். அரூர் கோட்டாட்சியர் செம்மலை சிறப்புரையாற்றி, வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்களுடன் நேரடி தொடர்பு அதிகம் கொண்டிருக்கும் காவல்துறை பணிகளில் மன அழுத்தம் அதிகம் இருக்கும். இப்படிப்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பணிச்சுமையிலிருந்து விடுபடவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்” என தெரிவித்தார்.
விழாவில் உட்கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.
- அரூர் செய்தியாளர் சிற்றரசு.
.gif)

