தருமபுரி, செப்.15 (ஆவணி 30):
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா தளவாய்ஹள்ளியில் பட்டா நிலத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதியில் வசிக்கும் பெருமாளின் மனைவி காவேரியம்மாளுக்கு, தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு 65 சென்ட் நிலம் வழங்கியிருந்தது. தற்போது அந்த நிலம் அவர் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், அந்த நிலத்தை நேரு நகரைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மயானம், ரேஷன் கடை உள்ளிட்ட பொதுப்பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு நிலவியது. மேலும், இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் வழக்காகவும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நேரு நகரைச் சேர்ந்த ராஜாமணி (61) மரணமடைந்தார். அவரது உடலை, குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காவேரியம்மாளின் பட்டா நிலத்தில் அடக்கம் செய்ய முயன்றனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இடையூறு தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால், நேரு நகரைச் சேர்ந்தவர்கள் காவேரியம்மாளின் நிலத்திலேயே ராஜாமணி உடலை அடக்கம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறிது நேரம் இண்டூர்–பாப்பாரப்பட்டி சாலையில் சாலை மறியலும் நடத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)

.jpg)
.jpg)