Type Here to Get Search Results !

தருமபுரியில் “பாஸ்கர் தி அதிசய மேன்” நூல் வெளியீடு – ஏழை மாணவர்களுக்கு பல்வேறு கல்விச் சலுகைகள் அறிவிப்பு.


தருமபுரி, செப். 07 (ஆவணி 22):

தருமபுரி பச்சமுத்து மகளிர் கல்லூரி வளாகத்தில், பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கரின் சாதனைகளை பதிவு செய்த “பாஸ்கர் தி அதிசய மேன்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.


புலவர் ஞானசம்பந்தம் நூலை வெளியிட்டு உரையாற்றினார். விழாவுக்கு ஓய்வு பெற்ற கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் சசிகலா பாஸ்கர், துணைத் தலைவர்கள் சங்கீத்குமார், அரங்கநாதன், இயக்குநர்கள் சங்கீதா புஷ்பசேகர், பிரியா சங்கீத்குமார், இன்னிசை அரங்கநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


பச்சமுத்து கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரை 110 பேர் மருத்துவர்கள், 363 பேர் பொறியாளர்கள், 75 பேர் வேளாண் பட்டதாரிகள் ஆகியுள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் புளி வணிக கட்டமைப்புகளை உருவாக்கியும், அரசு சார்பில் புளி வணிக மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் பாஸ்கர் மேற்கொண்டுள்ளார்.


விழாவில் மோகனதுர்கா வரவேற்புரை ஆற்றினார். நூலின் தொகுப்பாசிரியர் சிகரம் சதீஷ், “பாஸ்கர் தி அதிசய மேன்” நூலின் முக்கிய அம்சங்களை விளக்கினார். தருமபுரி பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.50,000 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் பச்சமுத்து அறக்கட்டளையின் உதவியுடன் உயர்கல்வி முடித்த முன்னாள் மாணவர்கள் பாஸ்கரின் சேவைகளை பாராட்டினர்.


பாஸ்கர் நன்றி உரையில், ஆண்டுதோறும் 25 ஏழை மாணவர்களுக்கு எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு நிர்ணய கட்டணத்தில் 10 ஆண்டுகள் கல்வி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் தாய் தந்தை இழந்த 100 ஏழை மாணவிகளுக்கு கல்லூரியில் கல்வி மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக, மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள் பணிபுரிய விரைவில் பல்லோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.


விழாவில் பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், புளி வணிகர்கள் உள்பட சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.


 - தருமபுரி செய்தியாளர் முருகேசன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies