அரூர், செப். 02 | ஆவணி 17 :
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் கலைவாணி, பள்ளி நேரத்தில் மேசையின் மீது படுத்து கொண்டு மாணவ, மாணவிகளை கை, கால்களை அமுக்கச் சொல்லிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பரவியதைத் தொடர்ந்து அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜியகுமார், வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள், வட்டாச்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்தியபிரியா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவர்களும், ஆசிரியையும் நேரில் விசாரித்தனர். அப்போது பொதுமக்கள் தெரிவித்ததாவது, கலைவாணி என்ற தலைமை ஆசிரியை தினமும் மாணவ, மாணவிகளிடம் கை, கால்களை அமுக்கச் சொல்லுவதாகவும், இதை பெற்றோரிடம் தெரிவிக்கக்கூடாது என மாணவர்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்தச் சம்பவத்தில் அதிருப்தி தெரிவித்த பொதுமக்கள், மாணவர்களை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியை கலைவாணி மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க கல்வித் துறையிடம் வலியுறுத்தியுள்ளனர்.