தருமபுரி, செப்.30 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் இல்லங்களுக்கே சென்று அரசு சேவைகளை வழங்கும் புதிய திட்டமான "உங்களுடன் ஸ்டாலின்" ஐ அறிவித்து, தொடங்கி வைத்ததாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், I.A.S. தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் ஒன்றியம், அடிலம், பஞ்சாயத்து அலுவலகம், கடத்தூர் ஒன்றியம், ஸ்ரீ மீனாட்சி மஹால், தருமபுரி ஒன்றியம், வே.முத்தம்பட்டி ஊராட்சி அலுவலகம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாகலஅள்ளி சமுதாய கூடம் உள்ளிட்ட இடங்களில் இன்று (30.09.2025) முகாம்கள் நடைபெற்றன. இம்முகாம்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாற்று ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் மற்றும் மற்ற அரசு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும்; தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகளின் 43 சேவைகள், ஊரக பகுதிகளில் 15 அரசு துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.