தருமபுரி, செப்.30 | புரட்டாசி 14 –
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தருமபுரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த போட்டிகள் 2025–2026 கல்வியாண்டை முன்னிட்டு தமிழில் மாணவர்களின் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படுகின்றன. அதன்படி, பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14.10.2025 அன்று நடைபெறும். மேலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 15.10.2025 அன்று நடைபெறவுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என பரிசுத் தொகைகள் வழங்கப்படும். ஒரு பள்ளி/கல்லூரியிலிருந்து ஒவ்வொரு போட்டிக்கும் அதிகபட்சம் மூன்று மாணவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளில் காலை 9.00 மணிக்குள் வருகையை பதிவு செய்ய வேண்டும். உரிய படிவங்களை பள்ளி தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் உறுதிப்படுத்தி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டி தொடங்கும் முன் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (கலை, சட்ட, மருத்துவ, தொழில்நுட்ப மற்றும் கல்வியியல்) மாணவர்கள் அனைவரும் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் அழைத்துக் கூறியுள்ளார்.