பாலக்கோடு, செப். 30 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சுடுகாடு ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் இந்த போராட்டம் துவங்கியது.
இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் ராதிகா, மாநில துணைச் செயலாளர் முத்து, மாநில செயலாளர் நாகராசன், சி.பி.ஐ.எம். வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு வட்டம், பஞ்சபள்ளி ஊராட்சி ஏழுகுண்டூர், அத்திமுட்லு ஊராட்சி அத்திமுட்லு, எர்ரனஅள்ளி ஊராட்சி குப்பன் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் ஆதிதிராவிடர் மற்றும் போயர் சமூக மக்கள் இறப்பவர்களை அடக்கம் செய்ய இடமின்றி நீண்டகாலமாக அவதியுறுவதாக கூறப்பட்டது.
இதுகுறித்து கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கலெக்டர் முதல் தாசில்தார் வரை மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை மயானம் ஒதுக்கப்படவில்லை எனவும், காரணமின்றி தாமதப்படுத்தப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். மேற்கண்ட கிராம மக்களுக்கு சுடுகாடு ஒதுக்கீடு செய்து தரும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.