நல்லம்பள்ளி, செப். 30 -
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கோம்பேரி ஏரியில் மர்ம கும்பல் விஷம் கலந்ததால், டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் பசுவராஜ் என்ற நபர் குத்தகை எடுத்து மீன்பிடித்து வந்தார்.
இன்று காலை கூலி தொழிலாளர்களுடன் ஏரிக்கு சென்ற அவர், டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், ஏரி நீரிலிருந்து கடும் விஷ வாடை வீசியதோடு, விஷ மருந்து கலந்த தடயங்களும் தென்பட்டன. இந்தச் சம்பவம் தொழில் போட்டி காரணமாக நடந்ததா அல்லது வேறு காரணமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் விஷம் கலந்த மர்ம கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குத்தகைதாரர் பசுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.