தருமபுரி, செப். 30 -
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஊராட்சியாக கருதப்படுகிறது. இங்கு 15-வது வார்டில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறார்கள். பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது, பொதுமக்கள் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பகுதி மக்களின் குற்றச்சாட்டு:
-
குடிநீர் பிரச்சனை: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டாலும் கடந்த 3 மாதங்களாக முறையாக விநியோகம் இல்லை.
-
அடிப்படை வசதிகள்: கீழ் மாரியம்மன் கோவில் தெரு, ஜெகநாதன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கழிவுநீர் கால்வாய், தூய்மை பணி, தெருவிளக்கு போன்ற வசதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
-
நீர்த்தேக்கங்கள்: பகுதியில் ஒரு மேல் நிலை நீர்தேக்க தொட்டியும், 2 மினி டேங்குகளும் உள்ளன. ஆனால் அவற்றின் மூலம் சரியான விநியோகம் நடைபெறவில்லை.
இதனால் கடும் அதிருப்தியடைந்த மக்கள், இன்று மாலை வரை தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யாவிட்டால் நாளை மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.