தருமபுரி, செப்டம்பர் 29:
தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் இன்று (29.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய அவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவத்துறையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு, இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, கலைஞரின் வருமுன் காப்போம் போன்ற பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பல்வேறு சுகாதார சேவைகள் தருமபுரி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் தேவைகளை கேட்டறிந்து அரசு முன் பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மகப்பேறு இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம், குறைவான எடையுள்ள குழந்தைகள் பிறப்பு விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளை குறைக்கும் நோக்கில் தரமான மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பாலக்கோடு MLA கே.பி. அன்பழகன், தருமபுரி MLA எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி MLA ஆ. கோவிந்தசாமி, அரூர் MLA வே. சம்பத் குமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.