தருமபுரி, செப். 02 (ஆவணி 17) -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்தின் ஜாலிபுதூர் AV மஹால் மற்றும் தருமபுரி ஒன்றியத்தின் திப்பிரெட்டிஹள்ளி மணிபுரம் சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.
இம்முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 45-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களையும் ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் உடனடியாக தீர்க்கக்கூடியவை அதே இடத்திலேயே தீர்க்கப்படும் என்றும், பிற மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 15 முதல் அக்டோபர் 3 வரை மொத்தம் 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. பொதுமக்களின் மனுக்கள் பதிவு செய்யும் வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் அளிக்க தேவையான அடிப்படை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி. காயத்ரி (தருமபுரி), திரு. செம்மலை (அரூர்), முன்னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன், வட்டாட்சியர்கள் திரு. ராஜராஜன், திரு. சின்னா, திரு. சௌகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

