பென்னாகரம், செப். 02 | ஆவணி 17 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மர்ம நபர்களால் மாட்டு கொட்டகை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளியைச் சேர்ந்த மனோகரன் (62), 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் முன்பு மாட்டுக் கொட்டகையை அமைத்து மாடுகளை பராமரித்து வருகிறார். இவரது தம்பி சரவணன், திருப்பூர் டாஸ்மார்க் குடோனில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மனோகரன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த வேளையில், சரவணன் வெளியூரிலிருந்து அடையாளம் தெரியாத நபர்களை அழைத்து வந்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து, மாட்டுக் கொட்டகையை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கொட்டகை முழுவதும் சேதமடைந்துள்ளது.
சம்பவம் குறித்த காட்சிகள் பகுதியளவில் கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், மனோகரன் பெரும்பாலை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.