ஏரியூர், செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
தர்மபுரி மாவட்டம் ஏரியூரில், தமிழ்நாடு அனைத்துப் பதிவு பெற்ற மருந்தாளுநர்கள் நலச் சங்கம் மற்றும் ஏரியூர் தமிழ்ச் சங்கம் இணைந்து உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஏரியூர் மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் சி. பஸ்பநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ப. சடையன், சமூக ஆர்வலர்கள் மா. நரசிம்மகுமார், கமலேசன், இயற்கை ஆர்வலர் துரை முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ம. இராஜகணபதி வரவேற்புரை ஆற்றினார். ஏரியூர் தமிழ்ச் சங்க நிறுவனர் மற்றும் தலைவர் நா. நாகராஜ், சங்க செயலாளர் ம. அருள்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி, ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் தகடூர் வெ. சரவணன் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினர்.
தமிழ்நாடு அனைத்துப் பதிவு பெற்ற மருந்தாளுநர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் கார்த்திக், மாநில செயலாளர் கிருஷ்ணகுமார், மாநில பொருளாளர் ராஜகணபதி, பொதுக்குழு உறுப்பினர் தண்டாயுத பாணி, கோவை மண்டல பொறுப்பாளர் பிரசாந் கண்ணன் ஆகியோர் மருந்துகள் மற்றும் அவற்றின் சரியான பயன்பாடு குறித்தும் விரிவாக கருத்துரைத்தனர். நிறைவாக மாநில துணைச் செயலாளர் த. சந்தோஷ்குமார் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.