தருமபுரி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10:
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் துறை கூட்டமைப்பின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தாசில்தார் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தனிதாசில்தார் சேதுலிங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்ராஜ், மாதேஷ், கிராம நிர்வாக உதவியாளர் சங்கர், வட்ட துணை ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் போதிய கால இடைவெளி வழங்கப்பட வேண்டும், மனுக்களை விசாரிக்கும் கால அளவை 45 நாட்கள் இருந்து 90 நாட்களாக அதிகரிக்க வேண்டும், புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பை 25% ஆக உயர்த்த வேண்டும் மற்றும் இளநிலை உதவியாளர்-தட்டச்சர் இடையேயான ஒருங்கிணைந்த நிர்ணய குளறுபடிகளை சரிசெய்ய உரிய அரசாணை வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இப்போராட்டம் இன்று மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. இதில் நில அளவையர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் போன்ற வருவாய் துறை கூட்டமைப்பினரை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.