Type Here to Get Search Results !

முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற அரசு பெண் ஊழியர்கள் – மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதி கோரிக்கை.


பாலக்கோடு, செப்டம்பர் 19 | ஆவணி 03:

2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தமிழகமெங்கும் கடந்த மாதம் நடைபெற்றன. டென்னிஸ், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஆண், பெண் பிரிவாக பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு முதல்வரின் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.


ஆனால், மாநில அளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சில விளையாட்டுகள் தவிர்க்கப்பட்டதோடு, அரசு ஊழியர் அணிகள் பங்கேற்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாவட்டத்தில் வெற்றி பெற்ற அனைத்து அரசு ஊழியர் அணிகளும் மாநில அளவில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


பெண்கள் விளையாட்டு வீராங்கனைகளின் கருத்து

முதல்வர் கோப்பை போட்டிகள் எங்களுக்கு ஒரு புதிய உயிரோட்டத்தையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன. பள்ளி, கல்லூரி காலத்தில் விளையாடிய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன. திருமணம், குடும்பம், அலுவலக பணிச்சுமை ஆகியவற்றால் போட்டிகளில் பங்கேற்பது அரிதான சூழலில் இருந்தபோதிலும், இப்போட்டிகள் எங்களை மீண்டும் விளையாட்டிற்கு அழைத்துவந்தன.


எங்களால் குடும்பத்தையும், பணியையும் கவனித்துக் கொண்டு, எந்த வயதிலும் விளையாட முடியும்” என்ற நம்பிக்கையை இந்த போட்டிகள் அளித்ததாக வீராங்கனைகள் தெரிவித்தனர். அதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் நடைபெறாததால், மாவட்ட போட்டிகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.


தருமபுரி பெண் அரசு ஊழியர்களின் வேண்டுகோள்

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பெண் ஊழியர்கள் கூறியதாவது: “முதல்வர் கோப்பை போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, ஆட்சியரின் கைகளால் பதக்கம் மற்றும் கோப்பைகளை பெற்றோம். ஆனால், மாநில அளவிலான போட்டிகளில் அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகளில் அனைத்து அரசு பெண் ஊழியர் அணிகளும் பங்கேற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்தனர்.

Headline: 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies