தருமபுரி, செப்டம்பர் 20 | புரட்டாசி 04:
தருமபுரி மாவட்டம் முழுவதும் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி வெங்கட்ரமண சுவாமி கோவில்களில் பக்தி நிரம்பிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணி அளவில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், ஆராதனைகள், திருக்கோஷ்டி தீபாரதனை நடைபெற்றது.
அக்கமனஹள்ளி மூக்கனூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவிலிலும், பழைய தருமபுரி வரதக்குப்பத்தில் உள்ள அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி சமேத பத்மாவதி தாயார் கோவிலிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இரு கோவில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மணியம்பாடி அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், ரோஜா பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். அங்கு அறங்காவலர் குழுத் தலைவர் பி.சி.ஆர். மனோகரன் மற்றும் விழா குழுவினரும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

